கம்பம் அருகே பணத்தகராறில் கூலித்தொழிலாளி குத்தி கொலை: கணவன்-மனைவி கைது

கம்பம் அருகே பணத்தகராறில் கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொலை
கொலை
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டி கருமாரிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் திராட்சை தோட்டத்தில் கொடிகளை பராமரிக்கும் கூலிவேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த முருகன்(50) என்பவருக்கு சொந்தமான வீட்டை ஒத்திக்கு எடுத்து வசித்து வந்தார். 3 வருட ஒப்பந்த அடிப்படையில் ஒத்தி எடுத்திருந்தார். ஆனால் ஒத்தி காலம் முடிவதற்கு முன்பாகவே தான் வீட்டை காலி செய்யப்போவதாகவும், எனவே தனது பணத்தை தருமாறு அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

இதனால் முருகனுக்கும், சிவக்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முருகன் வீட்டிற்கு சிவக்குமார் பணம் கேட்க சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் முருகனும், அவரது மனைவி பவுன்தாயும் கத்தியால் சிவக்குமாரை குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட சிவகுமாருக்கு செல்வராணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com