

கம்பம்:
தமிழக- கேரள மாநில எல்லைப்பகுதியில் கம்பம் அமைந்துள்ளது. இங்கு விவசாயத்திற்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடைஉற்பத்தி, மாடு வியாபாரம் நடைபெறுவதால் கம்பம்மெட்டு, குமுளி, கட்டப்பனை, நெடுங்கண்டம், வண்டிப்பெரியார் மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் இங்கு நடைபெறும் வாரச்சந்தை மற்றும் உழவர்சந்தைக்கு கேரளா மட்டுமின்றி கம்பத்தை சுற்றியுள்ள கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். இதனால் கம்பம் நகர் பரபரப்பாகவே காணப்படும்.
இதற்கிடையே தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. இதனை மர்ம நபர்கள் பயன்படுத்தி கொண்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுகின்றனர். இந்த கள்ளநோட்டுகளில் காந்தி உருவப்படத்துக்கு பின்னணியில் உள்ள நீரோட்ட குறியீடு இருக்காது. இது தெரியாமல் கள்ளநோட்டுகளை வாங்கும் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், கடைகளில் கூட்ட நெரிசல் நேரங்களில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் 500 ரூபாய் நோட்டுகளை அவசரத்தில் சரி பார்ப்பது கிடையாது, இதை மர்மநபர்கள் பயன்படுத்தி கொண்டு கள்ளநோட்டை புழக்கத்தில் விட்டு செல்கின்றனர். அந்த ரூபாய்களை கள்ள நோட்டு கண்டுபிடிக்கும் எந்திரத்தில் வைத்த பிறகுதான் கள்ளநோட்டு என தெரியவருகிறது. எனவே கம்பம் பகுதியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.