திருச்செந்தூர் அருகே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தலைமறைவு குற்றவாளி

திருச்செந்தூர் அருகே தலைமறைவு குற்றவாளியை போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்தவர் காட்பிரே(வயது 26). கப்பல் மாலுமி. இவர் விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார். கடந்த 18-ந் தேதி மீன்பிடி துறைமுகத்தில் நின்று கொண்டு இருந்தபோது அவருக்கும் அங்கு வந்த 4 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் காட்பிரேவை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த காட்பிரே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலுவை, மோகன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் மினிசகாயபுரத்தை சேர்ந்த மரியஆக்னல்(35), அருண் என்ற படையப்பா ஆகியோரை தேடி வந்தனர். மரிய ஆக்னல் பல வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் மரிய ஆக்னல் திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ஆலந்தலைக்கு சென்று அவர் தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய ஆக்னல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனே போலீசார் அவரை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com