கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் படுகாயம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மீது சுவர் இடிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்தான்.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் படுகாயம்
Published on

கடலூர்:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

கடலூரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 6 மணிக்கு குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. அதன் பின்பு கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில இடங்களில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இரவு 9 மணி அளவில் கடலூர் நகரில் பலத்த மழை கொட்டியது.

சுமார் ½ மணி நேரம் இந்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலை 5 மணி முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

காலை 10 மணிக்கு மேல் கடலூரில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் இம்பிரியல் ரோடு, லாரன்ஸ் ரோடு, திருப்பாதிரிப்புலியூர், ரெயில் நிலையம் போன்ற இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

மழை காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும், குடை பிடித்து கொண்டும் சென்றனர்.

பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வெளியே செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பை-கூளங்களாகவும் காட்சி அளிக்கிறது.

ரெயில்வே சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர்.

பண்ருட்டி, கண்டரக் கோட்டை, காடாம்புலியூர், புதுப்பேட்டை போன்ற பகுதிகளில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இன்று காலையும் அந்த பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

பண்ருட்டியில் இன்று காலை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் குடை பிடித்த படியும், நனைந்து கொண்டும் சென்றதை காண முடிந்தது.

இதேபோல் சிதம்பரம், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், கீழ்செருவாய், விருத்தாசலம், திட்டக்குடி, பெண்ணாடம், குறிஞ்சிப்பாடி, இறையூர், கூடலூர், முருகன்குடி போன்ற பகுதிகளில் இன்று காலையில் லேசான மழை பெய்தது.

கடலூர் முதுநகர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சிற்றரசு. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 13). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று மாலை 6 மணிக்கு தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அருகில் மழையில் நனைந்திருந்த வீட்டின் சுவர் திடீரென்று இடிந்து மாணவன் மீது விழுந்தது. இதில் அவன் படுகாயம் அடைந்தான்.

உடனே அக்கம் பக்கத்தினர் சிரஞ்சீவியை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று அதிகாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், பெரியதச்சூர் போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

அதுபோல் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com