உயிரிழந்த பெண் புலி உடல் அருகே சோகத்துடன் சுற்றிய குட்டிகள் - வனத்துறையினர் மீட்டனர்

இறந்து கிடந்த பெண் புலியின் உடல் அருகே சோகத்துடன் சுற்றிய 2 புலிக்குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்.
மீட்கப்பட்ட 2 ஆண் புலி குட்டிகள். முதுமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த புலியை படத்தில் காணலாம்.
மீட்கப்பட்ட 2 ஆண் புலி குட்டிகள். முதுமலை புலிகள் காப்பகத்தில் இறந்து கிடந்த புலியை படத்தில் காணலாம்.
Published on

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் (வெளி மண்டலம்) சிங்காரா வனச்சரக பகுதியில் கடந்த 19-ம் தேதி மாலை 5 மணிக்கு வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண் புலி ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருள் சூழ தொடங்கியதால் உடனடியாக இறந்த புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்துக்கு மீண்டும் சென்றனர். அப்போது இறந்த புலியின் உடல் கிடந்த இடத்தின் அருகே 2 புலிக்குட்டிகள் சோகத்துடன் சுற்றின.

தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாயின் உடலை அவை சுற்றி வந்ததும், பிறந்து 3 வாரங்களே ஆனதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த குட்டிகள் முதுமலை காப்பக முகாமுக்கு கொண்டு வரப்பட்டன. பிறகு அந்த குட்டிகள் தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இறந்த புலியின் உடலை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிறகு அந்த புலியின் உடல் அதிகாரிகள் முன்னிலையில் எரிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் புலி இறந்தது எப்படி என்பது தெரியவில்லை. அதற்கான காரணங்களை கண்டறிய அதன் உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட 2 குட்டிகளை இங்கு வைத்து பராமரிப்பதா அல்லது வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைப்பதா என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com