கூர்காலாந்து போராட்டம் - டார்ஜிலிங்கில் இயல்பு நிலை திரும்புகிறது: சி.ஆர்.பி.எஃப்

மேற்குவங்க மாநிலத்தில் காலவரையற்ற போராட்டம் தொடங்கிய கூர்காலாந்து பகுதியில் இயல்பு நிலை திரும்பி வருவதாக மத்திய ரிசர்வ் படை தெரிவித்துள்ளது.
கூர்காலாந்து போராட்டம் - டார்ஜிலிங்கில் இயல்பு நிலை திரும்புகிறது: சி.ஆர்.பி.எஃப்
Published on

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தின் வடக்கு நகரமான டார்ஜிலிங் மலைப் பகுதி மக்கள், தங்கள் பகுதியை மேற்கு வங்கத்தில் இருந்து பிரித்து கூர்காலாந்து உருவாக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். அவ்வப்போது, இது தொடர்பான போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்துவர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடும்.

இம்முறை, அம்மாநிலத்தில் 10-ம் வகுப்பு வரை வங்கமொழி கட்டாயம் படிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தனி மாநில விவகாரம் மீண்டும் வெடித்தது.

இந்நிலையில், தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி, கூர்க்கா ஜனமுக்தி மோர்சா கட்சி இன்று காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றம், வங்கி ஆகியவை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மத்திய, மாநில அலுவலகங்களும் அடைக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்து இருந்தனர். மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் முக்கிய இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் எனவும் அக்கட்சி தெரிவித்தது.

இதையடுத்து, கூர்காலந்து பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மத்திய ரிசர்வ் படையின் துணை ராணுவ வீரர்கள் மற்றும் அதிரடிப் படை வீரர்கள் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி பெண் போலீசார்களும் இறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகப்படியான பாதுகாப்பால் டார்ஜிலிங்கி இயல்பு நிலை திரும்பி வருவதாக மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டம் அருவருக்கத்தக்கது என்று கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கூர்காலந்து பகுதி மக்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com