கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவையில் பிரமாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
Published on

கோவை:

கோவை வ.உ.சி. பூங்கா மைதானம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சறுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம் சர்வதேச தரத்தில் செயற்கை தளத்துடன் ரூ.48 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை தாங்கி, புதுப்பிக்கப்பட்ட சறுக்கு விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பேசியதாவது:-

கோவையில் சறுக்கு விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச தரத்தில் சறுக்கு விளையாட்டு மைதானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து கோவையில் பிரமாண்டமான முறையில், சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

இதேபோல ஆர்.எஸ்.புரத்தில் சர்வதேச தரத்தில் ஆக்கி மைதானம் தயாராகி வருகிறது. விரைவில் அது திறக்கப்படும். கோவையில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக நேரு விளையாட்டு மைதானத்தில் சர்வதேச அளவில் கால்பந்து மைதானம் அமைய உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், எட்டி மடை சண்முகம், கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி தனி அதிகாரி விஜய கார்த்திகேயன் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சறுக்கு விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com