

சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களுக்கு ரெயில்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதா என்பதை ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் ரெயில் டிரைவர்கள் உஷார்படுத்தப்பட்டு இருப்பதால் மிதமான வேகத்தில் இயக்கப்படுகின்றன.
மின்சார ரெயில் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறதா என்பதை கண்காணித்து இயக்க டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலையில் பரங்கிமலை-பல்லாவரம் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதை டிரைவர் கண்டு பிடித்தார். இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது காலை 6.30 மணிக்கு விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பாதையில் சிறிது நேரம் சேவை நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப ஊழியர்கள் தண்டவாளத்தை சரி செய்த பின்னர் மின்சார ரெயில் சேவை தொடங்கியது.
சென்னை கடற்கரை- சென்ட்ரல்- திருவள்ளூர் மார்க்கத்தில் மின்சார ரெயில் இயக்கக்கூடிய மின்வயரில் திடீரென மின்சப்ளை துண்டிக்கப்பட்டது. எழும்பூர்- செங்கல்பட்டு வழித் தடத்திலும் மின் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே வழியில் நின்றன. மின்சாரம் தடைப்பட்டதால் வேறு பகுதியில் இருந்து உடனடியாக மின் விநியோகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ரெயில்கள் இயக்கப்பட்டன.
ஒருசில இடங்களில் மழை நீர் புகுந்ததால் தானியங்கி சிக்னல் செயல்படவில்லை. இதனால் ரெயில்கள் தாமதமாக நிலையங்களுக்கு சென்றன. ரெயில்வே ஊழியர்கள் சைகை மூலம் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.