

லக்னோ:
பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி நடந்து வரும் பெண்களை கேலி செய்யும் செயல்களால் (ஈவ் டீசிங்) கோபமடைந்த மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் கலைப்பிரிவு மாணவி ஒருவரை கேலி செய்தனர். அதைத் தொடர்ந்து மாணவிகள் பல்கலைக்கழக
வளாகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
மேலும், பல்கலைக்கழக துணை வேந்தரை நேரில் சந்திப்பதற்காக அவரது குடியிருப்பை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்து, மாணவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். ஆனால், மாணவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. இதனால், போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். போலீசாரின் தடியடியால் பல மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும், சில பத்திரிக்கையாளர்களும் ரத்தக்காயம் அடைந்தனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கை பெரிதும் விமர்சிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தடியடி நடத்திய நிகழ்வில் தொடர்புடைய இரண்டு போலீசார் மற்றும் மூன்று நகர கூடுதல் மாஜிஸ்திரேட்டுகள் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.