கேரளாவில் வன்முறை: மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. - பா.ஜ.க. உறுப்பினர்கள் மோதல்

கேரளாவில் நடந்த வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கேரளாவில் வன்முறை: மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. - பா.ஜ.க. உறுப்பினர்கள் மோதல்
Published on

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு கம்யூனிஸ்டு கட்சியினரே காரணம் என பா.ஜனதாவினர் குற்றம் சாட்டினர். இந்த கொலையை கண்டித்து மாநிலம் முழுவதும் கடை அடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம், கவர்னர் சதாசிவம் விளக்கம் கேட்டார். இதன்பின்னர், பினராயி விஜயன், பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., கம்யூனிஸ்டு கட்சியினரை அழைத்து அமைதிப் பேச்சு நடத்தினார். வரும் 6-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் கேரளாவில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இன்று கடும் அமளி ஏற்பட்டது.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை தொடங்கி வைத்தார். கேள்வி நேரத்தின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காசர்கோடு தொகுதியை சேர்ந்த கருணாகரன் இதுகுறித்து பேசினார்.

அப்போது, நேற்றைய விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கட்சியினரை பா.ஜ.க. உறுப்பினர்கள் தரக்குறைவாக பேசி விமர்சனம் செய்ததை கண்டித்து பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சபாநாயகர் அவையை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.

அதன்பின்னர், அவை தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கருணாகரன் மீண்டும் பேசத் தொடங்கினார். ஆனால் அதே பிரச்சினை குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையின் நடுவே சென்று கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பா.ஜ.க.வினர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் கோஷமிட்டனர், இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து, சபாநாயகர் பா.ஜ.க.வினரை அமைதியாக இருக்கும்படி கூறினார். “நீங்கள் அவையை குருஷேத்ராவாக மாற்ற நினைக்க வேண்டாம். தர்மஷேத்ராவாக நினைத்து அனைத்து விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த முன்வர வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com