

குடியாத்தம்:
வேலூர் மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் குடியாத்தத்தில் நடந்தது. அப்போது தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசு முதுகெழும்பு உள்ள அரசாக நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் நடத்துகின்ற போராட்டங்களை கட்டுப்படுத்தாத அரசாக தமிழக அரசு உள்ளது. இந்தநிலை தொடர்ந்தால் இதன் விளைவுகளை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க. அரசு சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மத்திய மந்திரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவானால் இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது. தி.மு.க. விவசாயிகளுக்கு ஆதரவானது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறது. பாலாற்றின் மீது ஆந்திர அரசு அணை கட்ட முயன்றபோது தி.மு.க. எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
பா.ஜ.க. தான் அதனை எதிர்த்து பாதயாத்திரை மேற்கொண்டது. ஒரு மாநிலத்தின் உரிமையை மற்றொரு மாநிலம் பறித்து கொள்வதை பா.ஜ.க. ஏற்று கொள்ளாது. பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவர் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பயணத்தின் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சியில் புதிய மைல் கல்லாக அமையும்.
ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும். அதில் தமிழர் ஒருவர் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்று கேட்கிறீர்கள். தமிழர் வந்தால் எனக்கும் மகிழ்ச்சி தான்.
அ.தி.மு.க. உட்கட்சி பிரச்சினையில் பா.ஜ.க. தலையிடாது. ஒற்றுமைக்கும், பிளவுக்கும் அவர்களே காரணம். அவர்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் 2 பிரிவுகளும் இழக்க நேரிடும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை உள்ள அரசை தூக்கி எறிவது மத்திய அரசின் வேலை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.