

கோவை:
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணிபுரிந்து வந்தவர் கணபதி. இவர், சுரேஷ் என்பவரிடம் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
வீட்டில் வைத்து லஞ்சப் பணத்தை வாங்கும்போது, கணபதி கையும், களவுமாக பிடிபட்டார். லஞ்சத் ஒழிப்புத்துறை காவல் பிரிவினர் இவரை கைது செய்தனர். அவருக்கு உதவியதாக வேதியல் பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கோவை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. கடந்த 12-ம் தேதி கணபதியை 4 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி அளித்தது.
இன்றுடன் விசாரணை கெடு முடிந்த நிலையில், மீண்டும் கணபதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நெருக்கடியின் காரணமாகவே லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மார்ச் 2 வரை அவருக்கு போலீஸ் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.