

உ.பி.யின் உன்னாவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்கார் மீது பாலியல் பலாத்காரம் குற்றம் சுமத்திய பெண் கடந்த மாதம் இறுதியில் விபத்தில் சிக்கினார். அவருடைய கார் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் பலாத்காரம் மற்றும் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி டெல்லி நீதிமன்றமும் வழக்கை தினசரி விசாரித்து வருகிறது. இந்நிலையில் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், அவருடைய முகவரி, குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளின் அடையாளத்தை வெளியிட மீடியாக்களுக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சாட்சிகளின் வாக்கு மூலங்களையும் வெளியிடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.