காதல் ஜோடியை கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை- தேனி கோர்ட்டு அதிரடி

சுருளி அருவி வனப்பகுதியில் காதலர்களை கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
காதல் ஜோடியை கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை- தேனி கோர்ட்டு அதிரடி
Published on

தேனி:

தேனி மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த தங்கநதி மகன் எழில்முதல்வன் (வயது 21). தேனி அருகே உள்ள முத்து தேவன் பட்டியைச் சேர்ந்த கணேசன் மகள் கஸ்தூரி (21) இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்து வந்தனர். பின்னர் வீட்டில் எதிர்ப்பு வரவே வீட்டை விட்டு வெளியேறினர்.

கடந்த 14.5.2011-ந் தேதி கஸ்தூரியை காணவில்லை என அவரது தந்தை கணேசன் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் சுருளி அருவி வனப்பகுதியில் ஆண், பெண் இருவரின் உடல்கள் நிர்வாண நிலையில் கிடப்பதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவர்களது உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் இறந்தது எழில்முதல்வன், கஸ்தூரி என்பது தெரிய வந்தது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு அவர்கள் கொலை செய்யப்பட்டதும், கஸ்தூரி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் கருநாக்கன்முத்தன் பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டை வெள்ளை (30) சம்பந்தப்பட்டது தெரிய வந்தது. எழில்முதல்வனை கொன்று விட்டு கஸ்தூரியை கற்பழித்து திவாகர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து திவாகரனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி செந்தில்குமரேசன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இரட்டை கொலைகளை செய்த திவாகரனுக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தேனி மாவட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com