பழனி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடிகள் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
பழனி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்
Published on

பழனி:

பழனியை சேர்ந்தவர் சுப்ரமணி. அவரது மகன் செந்தில்குமார். பி.பி.ஏ. பட்டதாரியான இவர், நெல்லையில் உள்ள ஒரு கோழிப்பணையில் கண்காணிப்பாளராக வேலை பார்க்கிறார். அதே பண்ணையில் நெல்லையை சேர்ந்த முருகன் மகள் பொன்னரசி (19) என்பவர் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் குறித்து அறிந்த முருகன் குடும்பத்தினர் இருவரின் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொன்னரசி வீட்டைவிட்டு வெளியேறி செந்தில்குமாருடன் பழனிக்கு வந்தார். அதையடுத்து செந்தில்குமார் குடும்பத்தினர் உதவியுடன் கோதைமங்கலத்தில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர். போலீசார் பொன்னரசியின் பெற்றோரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து விசாரணைக்கு வரும்படி கூறி பொன்னரசியை கணவருடன் அனுப்பி வைத்தனர்.

இதே போல் மானூர் அண்ணாநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் தாடகை. இவருடைய மகன் சுரேஷ். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது அங்கு உடன் வேலை பார்த்த திருவண்ணாமலை குளக்கரை பகுதியை சேர்ந்த நடராஜன் மகள் சித்ரா (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியது. இவர்களின் காதல் விவகாரம் குறித்து அறிந்த இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரும் பழனிக்கு வந்தனர். தொடர்ந்து பழனியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுரேஷ் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சித்ரா குடும்பத்தினர் ஏற்கவில்லை. அதையடுத்து சித்ரா மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com