மொடக்குறிச்சி வங்கியில் எடுத்த பணத்தில் கள்ளநோட்டு: ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

மொடக்குறிச்சி வங்கியில் எடுத்த பணத்தில் கள்ளநோட்டு இருந்தது குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
மொடக்குறிச்சியில் எடுத்த பணத்தில் கள்ளநோட்டு என்று மற்றொரு வங்கியில் அடையாளமிட்டு காட்டப்பட்டுள்ள காட்சி.
மொடக்குறிச்சியில் எடுத்த பணத்தில் கள்ளநோட்டு என்று மற்றொரு வங்கியில் அடையாளமிட்டு காட்டப்பட்டுள்ள காட்சி.
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி கரிய காளிநகர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 47). தொழிலதிபர். இவர் கடந்த 24-ந் தேதி மொடக்குறிச்சி அவல்பூந்துறை ரோட்டில் உள்ள வங்கியில் ரூ.3 லட்சம் பணம் எடுத்தார்.

பின்னர் 28-ந் தேதி மதியம் ஈரோடு சோலார் பகுதியில் உள்ள வங்கியில் அந்த பணத்தை செலுத்த சென்றார். அப்போது வங்கி ஊழியர் இதில் 6 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் இருப்பதாக கூறினார்.

இதனால் குப்புசாமி அதிர்ச்சியடைந்தார். மொடக்குறிச்சி வங்கியில் இருந்து எடுத்த பணம் என்று அவர் கூறியதால் ஈரோடு வங்கியினர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டனர்.

எனவே குப்புசாமி மொடக்குறிச்சி வங்கிக்கு திரும்பி வந்து வங்கி மேலாளர் நித்யகல்யாணியிடம் நடந்ததை கூறினார். ‘‘உங்கள் வங்கியில் எடுத்த பணம்தான். ஆனால் கள்ள நோட்டு என்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

ஆனால் வங்கி மேலாளர், 4 நாட்களுக்கு முன்பு வங்கியில் எடுத்த பணத்திற்கு வங்கி பொறுப்பேற்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் மொடக்குறிச்சி ஓலப்பாளையத்தை சேர்ந்த லேத் உரிமையாளர் கவுரிசங்கர் அதே வங்கியில் ரூ.15 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு மொடக்குறிச்சியில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்றார்.

அங்கு கொடுத்தபோது அதில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று கூறி அதில் அடையாளமிட்டு திருப்பி கொடுத்து விட்டனர். அவரும் கள்ள நோட்டு எடுத்த வங்கிக்கு சென்று கேட்டார்.

அவரிடம் மேலாளர் தங்களது வங்கியில் எடுத்த பணம் இல்லை என்று வாதிட்டதாககூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள், அப்பகுதி வணிகர்கள் அனைவரும் வங்கியை முற்றுகையிட்டனர்.

இதனால் வங்கி அதிகாரிகள் வங்கியை மூடிவிட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு சென்று வங்கி மேலாளர் மீது புகார் கொடுத்தனர். அந்த புகாரின் மீது போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர்.

வங்கியில் எடுத்த பணத்தில் கள்ள நோட்டு இருந்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அந்த வங்கி ஊழியர்கள் யாருக்கும் இதில் தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக கோவையில் இருந்து வங்கி அதிகாரிகள் மொடக்குறிச்சிக்கு  வருகிறார்கள். அவர்கள் வங்கி ஊழியர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com