சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் இருந்து அடிக்கடி தப்பி செல்லும் நோயாளிகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் இருந்து அடிக்கடி நோயாளிகள் தப்பி செல்கிறார்கள். இதற்கு பாதுகாப்பு குளறுபடி காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் நோயாளிகள் சிலர் அவ்வப்போது தப்பி செல்கின்றனர். பின்னர் அவர்களை போலீசார் மீட்டு வந்து மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இரவு வார்டில் இருந்து நைசாக தப்பி விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த மூதாட்டியை அரிசிபாளையம், 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இதனிடையே லீ பஜாரில் உள்ள ஒரு கடை முன்பு படுத்திருந்த அந்த மூதாட்டியை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டனர். இதையடுத்து அவரை மருத்துவ பணியாளர்கள் உதவியுடன் மீண்டும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வார்டில் இருந்து சிகிச்சை பெறுபவர்கள் அடிக்கடி தப்பி செல்வதால், அவர்கள் மூலமாக மேலும் பலருக்கு பரவ வாய்ப்புள்ளது என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பு குளறுபடி தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே ஆஸ்பத்திரியில் இருந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தப்பி செல்லாதவாறு பாதுகாப்பை அதிகரிக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com