

ரோம்:
அன்னை தெரசாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், வாடிகனில் நடந்த கோலாகல விழாவில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
அதைத் தொடர்ந்து, அவர் அணிந்து வந்த நீல நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலைக்கு, அன்னை தெரசா உருவாக்கிய ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டி’ அமைப்பினால் இந்திய வர்த்தக முத்திரை பதிவகத்தில் பதிவு செய்து, அறிவுசார் சொத்தாக பதிப்புரிமை பெறப்பட்டுள்ளது.
அதாவது, இந்த சேலையின் படத்தை புத்தகங்கள், சினிமா படங்கள், காலண்டர்கள் என எதில் பயன்படுத்தினாலும் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதி.
உலகமெங்கும் போற்றப்படக்கூடிய அன்னை தெரசாவின் சேலைக்கு பதிப்புரிமை பெற்று, கட்டணம் செலுத்த வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி வாடிகனில் உள்ள கார்டினல் ஜோஸ் சரைவா மார்டின்ஸ் (வயது 85) கருத்து தெரிவித்து, இத்தாலி வார இதழான ‘பனோரமா’வில் வெளிவந்துள்ளது.
அதில் அவர், “இப்போது அன்னை தெரசாவின் சேலைக்கு வரி (கட்டணம்) செலுத்தவேண்டும் என்பது அபத்தமானது. இப்படி ஒன்றை நான் கேள்விப்படுவது இதுவே முதல் முறை, அன்னை தெரசா உலகளாவிய அடையாளம். அவர் நம்புபவர்கள், நம்பாதவர்கள் என அனைவராலும் நேசிக்கப்படுபவர்” என கூறி உள்ளார்.
மேலும், “இது நிச்சயமாக புனித அன்னையின் நினைவுக்கு கவுரவம் சேர்க்காது. இது வாடிகனில் பலரை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை பேச வைக்க இது தூண்டப்படலாம்” என்றும் கூறி உள்ளார்.