பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா-சவுதி அரேபியா ஒத்துழைப்பில் முன்னேற்றம்: மோடி பெருமிதம்

பாதுகாப்பு விவகாரங்களில் இந்தியா-சவூதி அரேபியா இடையேயான ஒத்துழைப்பு வலுப்பெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான்
பிரதமர் மோடி மற்றும் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான்
Published on

ரியாத்:

சவுதி அரேபிய மன்னரின் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று சவுதி அரேபியாவுக்கு சென்றார். 

இந்த  சுற்றுப்பயணத்தின்போது, சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தை மோடி சந்தித்து பேசுகிறார். சவுதி அரேபியாவின் சில மந்திரிகளையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3வது அமர்வில் கலந்து கொண்டார். நிகழ்வில் மோடி பேசியதாவது:-

பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு மற்றும் கொள்கை விவகாரங்களில் நமது ஒத்துழைப்பு மிகச் சிறந்த முறையில் முன்னேறி வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரியாத்துக்கு வருகை புரிந்தது பயனுள்ளதாக இருந்தது.

இது தொடர்பாக பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழு வழக்கமான கூட்டங்களை நடத்தி வருகிறது. பாதுகாப்புத் துறையில் பரஸ்பர ஆர்வம் மற்றும் ஒத்துழைப்புக்கான பல பகுதிகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்

பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை ஏற்படுத்த இரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ஒரு விரிவான பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஜி20 மாநாடு மூலம் இந்தியாவும் சவுதி அரேபியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. 

அண்டை நாடுகளுடனான இருதரப்பு உறவுகளில் சவுதி அரேபியாவுடனான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இருதரப்பு உறவுகள் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சவூதி அரேபியா பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடு ஆகும். காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியாவிடம் பலமுறை ஆதரவு கோரியுள்ளார். ரியாத்தில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு நிறுவன மன்றத்தின் 3-வது அமர்வில் இம்ரான் கானும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com