குன்னூரில் பலத்த மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

குன்னூரில் இடியுடன் பெய்த பலத்த மழைக்கு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
குன்னூரில் பலத்த மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது
Published on

குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை 3.45 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இடி - மின்னலுடன் இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது.

பலத்த மழை காரணமாக கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குன்னூர் கீழ் ராஜாஜி நகர் குடியிருப்பு பகுதியை மழை நீர் சூழ்ந்தது. அங்குள்ள 10 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வீடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அங்கு வைக்கப்பட்டு இருந்த மாணவர்களின் பாடப்புத்தகம், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தது.

இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். பொதுமக்களே மழை நீரை அப்புறப்படுத்தினார்கள். கால்வாய்களை தூர்வாரினால் மட்டுமே வீடுகளுக்குள் மழை நீர் புகுவதை தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை குன்னூர் நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம், கே.என்.ஆர். நகர் ஆகிய இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்தது.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றது. சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் அகற்றினார்கள்.

இதன் பின்னர் போக்குவரத்து சீரானது. குன்னூர் டால்பின்நோஸ் சுற்றுலா தளம் பகுதியில் கரன்சி அருகே சாலையில் விழுந்த மரத்தையும் தீயணைப்பு துறையினர் அகற்றினார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com