டெல்லி ஆஸ்பத்திரிக்கு லாலு பிரசாத்தை ரெயிலில் அழைத்து சென்றதால் சர்ச்சை

உடல்நிலை பாதிப்பு அடைந்த லாலுபிரசாத் யாதவை டெல்லி ஆஸ்பத்திரிக்கு ரெயிலில் வேண்டுமென்ற மாநில அரசு அழைத்து சென்றுள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றம் சாட்டி உள்ளது. #LaluPrasadYadav
டெல்லி ஆஸ்பத்திரிக்கு லாலு பிரசாத்தை ரெயிலில் அழைத்து சென்றதால் சர்ச்சை
Published on

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மீதான மாட்டு தீவன வழக்குகளில் கோர்ட்டு அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு கடந்த 17-ந்தேதி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராஞ்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

2014-ம் ஆண்டு லாலுவுக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. மேலும் அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது. இதன் காரணமாக அவருடைய உடல்நிலை தொடர்ந்து பாதிப்படைந்து வந்தது.

இதனால் டாக்டர்கள் குழு அவரது உடலை பரிசோதித்தது. அவருக்கு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அந்த குழு சிபாரிசு செய்தது.

எனவே டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமைனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவர் ராஞ்சியில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லி அழைத்து செல்லப்பட்டார். 16 மணி நேரம் பயணம் செய்து டெல்லி சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே லாலு பிரசாத்தை ரெயிலில் அழைத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஜெயில் கைதி என்பதால் மாநில அரசு தான் செலவு செய்து அழைத்து செல்ல வேண்டும். அவரை டெல்லிக்கு அழைத்து செல்ல முடிவெடுத்ததுமே விமானத்தில் அழைத்து செல்வது குறித்து மாநில அரசுக்கு ஜெயில் துறையில் இருந்து கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.

ஆனால் விமான பயணத்திற்கு மாநில அரசு அனுமதிக்கவில்லை. ரெயில் பயணத்திற்கு மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் தான் அவர் ரெயிலில் அழைத்து செல்லப்பட்டார்.

விமானத்தில் அழைத்து செல்ல மாநில பாரதிய ஜனதா அரசு வேண்டுமென்றே மறுத்துவிட்டதாகவும், இந்த வி‌ஷயத்தில் அராஜகமாக நடந்து கொணடதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் சிவானந்த் திவாரி குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, லாலுபிரசாத் ஒரு தேசிய தலைவர். அவருக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசு விமானத்தில் அழைத்து சென்றிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் வலுக்கட்டாயமாக ரெயிலில் அழைத்து சென்றிருக்கிறார்கள். அவருக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com