வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என் கைகளில் இல்லை - மத்திய உணவு மந்திரி பஸ்வான் பேட்டி

வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது என் கைகளில் இல்லை என்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.
வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என் கைகளில் இல்லை - மத்திய உணவு மந்திரி பஸ்வான் பேட்டி
Published on

புதுடெல்லி:

வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது என் கைகளில் இல்லை என்று மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

ஒவ்வொரு வீட்டிலும் சமையலில் வெங்காயத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அது அசைவ உணவாக இருந்தாலும், சைவ உணவாக இருந்தாலும் வெங்காயம் தவிர்க்க முடியாத பொருளாக இருக்கிறது.

ஆனால் வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வரும் என்று சொல்கிற நிலை இப்போது மாறி, வெங்காய விலையை கேட்டாலே கண்ணீர் வரும் என்ற சூழல் உருவாகி உள்ளது. சாதாரணமாக கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்கிறது. இதே போன்று தான் தக்காளி விலையும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.40-ஐ கடந்து விற்பனையாகிறது.

வெங்காயம், தக்காளியின் விலை உயர்வு சாமானிய மக்களுக்கு பெருத்த தலைவலியாக மாறி உள்ளது.

இந்த நிலையில் மத்திய உணவு, நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான், உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளிதான். வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது என் கைகளில் இல்லை.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி செய்கிற மாநிலங்களில் விதைப்பு குறைவாகத்தான் நடந்துள்ளது.

வெங்காயம், தக்காளி விலை மராட்டியம், மத்திய பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் குறைவாக உள்ளது. வெங்காயம் விதைப்பு பரப்பளவு 2.65 லட்சம் ஹெக்டேரில் இருந்து 1.90 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

எனவே உள்நாட்டு சந்தையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்கிற வகையில் செயல்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, வெங்காய பதுக்கலை தடுக்கிற விதத்தில் இருப்பு வைப்பதில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

வெங்காய ஏற்றுமதியை பொறுத்தமட்டில் குவிண்டாலுக்கு தரை விலை 850 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.55 ஆயிரத்து 250) என நிர்ணயித்தோம். இதனால் கடந்த 23-ந் தேதி 4,050 டன்களாக இருந்த ஏற்றுமதி, 28-ந் தேதி 137 டன்களாக குறைந்து விட்டது. தவிரவும், 2 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

கரீப் பருவ வெங்காய அறுவடை நடந்த பின்னர், அதன் விலை குறையத்தொடங்கும். மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யுமாறு நபெட்டை (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தும் அமைப்பு) கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

நபெட்டிடம் இருந்து வாங்குமாறு டெல்லி மாநில அரசை கூறி உள்ளோம். அவற்றை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யுமாறு சொல்லி இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com