ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்கள் கோதாவரி நதிநீரை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம்

ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களிடையே கோதாவரி நதி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்கள் கோதாவரி நதிநீரை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம்
Published on

ஐதராபாத்:

வற்றாத ஜீவ நதிகளான கிருஷ்ணா, கோதாவரி ஆகியவை மராட்டியம்- தெலுங்கானா மாநிலங்களில் உற்பத்தியாகி ஆந்திரா வழியாக பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது.

கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளின் குறுக்கே ஸ்ரீசைலம், நாகார்ஜூனா போன்ற மிகப் பெரிய அணைகள் கட்டி இரு மாநிலங்களின் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணா-கோதாவரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மராட்டியம், தெலுங்கானா, ஆந்திர மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில பிரிவினைக்குப் பின்பு அந்த மாநிலம் அதிக அளவில் நதி நீரை பெற்று உபரி நீர் மட்டுமே ஆந்திராவுக்கு கிடைக்கும் நிலை உருவானது.

இதையடுத்து ஆந்திராவுக்கு உரிய நதி நீரை பங்கிட்டுக் கொள்வதற்காக இருமாநில அதிகாரிகள் அடங்கிய கிருஷ்ணா நதிநீர் வேளாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த வாரியம் இதற்கு முன் 7 முறை கூடி நதி நீரை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது.

நேற்று ஐதராபாத்தில் 7-வது முறையாக நதி நீர் வாரிய குழு கூடியது. இதில் இரு மாநிலங்கள் இடையே நதி நீர் பங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. நதி நீரை பங்கிடுவது தொடர்பாக பட்டிசீமா நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் சிபாரிசு அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மொத்தம் பெறும் 100 சதவீத தண்ணீரில் ஆந்திராவுக்கு 66 சதவீதம், தெலுங்கானாவுக்கு 34 சதவீதம் என்ற அடிப்படையில் பிரித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்ரீசைலம், நாகார்ஜுனா அணைகளில் தேங்கும் 330 டி.எம்.சி. தண்ணீரில் ஆந்திராவுக்கு 217.8 டி.எம்.சி. தண்ணீரும், தெலுங்கானாவுக்கு 112.2 டி.எம்.சி. தண்ணீரும் கிடைக்கும்.

ஐதராபாத் நகரின் குடிநீர் தேவைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத் நகருக்கு தட்டுப்பாடு இன்றி தேவையான அளவு குடிநீர் வழங்கப்படும்.

இதுபற்றி நீர் மேலாண்மை வாரிய தலைவர் ஸ்ரீவத்சவா கூறுகையில், ஐதராபாத் நகரம் பூகோள அடிப்டையில் தெலுங்கானாவில் உள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு அது இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருப்பதால் இரு மாநிலங்களுமே ஐதராபாத் நகருக்கு குடிநீர் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com