ரவுடி பினுவை புழல் சிறையில் தீர்த்துக்கட்ட சதியா?

உயர் பாதுகாப்பு பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ள ரவுடி பினுவை புழல் சிறையிலேயே தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரவுடி பினுவை புழல் சிறையில் தீர்த்துக்கட்ட சதியா?
Published on

சென்னை:

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ரவுடி பினு கடந்த 6-ந் தேதி மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கத்தில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு பிறந்தநாள் கொண்டாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தபோது, பினு தப்பி ஓடிவிட்டார். விருகம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி ராதாகிருஷ்ணனை தீர்த்துக் கட்டுவதற்காக பினு திட்டம் தீட்டியதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பினுவையும், ராதாகிருஷ்ணனையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி பினு கடந்த 12-ந்தேதி போலீசில் சரண் அடைந்தார். அப்போது பினு அளித்த வாக்குமூலத்தில் நான் பெரிய ரவுடியெல்லாம் இல்லை. கட்டாயப்படுத்தியே பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வைத்து விட்டனர் என்று கூறியிருந்தார்.

போலீஸ் விசாரணைக்கு பின்னர் பினு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உயர் பாதுகாப்பு பிரிவில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

இதற்கிடையே புழல் சிறையிலேயே பினுவை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பினுவின் பரபரப்பான பிறந்தநாள் விழாவை பொறுத்துக் கொள்ள முடியாத சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவன் புழல் சிறையிலேயே பினுவை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த ரவுடி இதற்காக உடல்நிலை சரியில்லை என்று கூறி பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பத்திரியில் இருந்தபடியே பினுவை கொலை செய்ய தனது கூட்டாளிகளுடன் அந்த ரவுடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் உள்ள ரவுடியையும் அவரது கூட்டாளிகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதுபற்றி சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ரவுடி பினு உயர் பாதுகாப்பு பிரிவிலேயே இருக்கிறார் என்றும் எனவே சிறையில் அவரை கொலை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com