

புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஜன் ஆக்ரோஷ்’ (மக்களின் கோபம்) என்ற பெயரில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. நடைபெற உள்ள பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக நடந்த இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கட்சித்தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கி வழிநடத்தினார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர் மத்திய அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக தாக்கி பேசினார். அவர் உரையாற்றும் போது கூறியதாவது:-
இந்திய திருநாடு நம்பிக்கைக்கு பெயர்பெற்றது. உண்மை என்ற அடித்தளத்திலேயே நம்பிக்கை கட்டமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். தற்போது இதை மக்களும் புரிந்து கொண்டுவிட்டனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல், வன்முறை சம்பவங்கள் அதிகரித்து விட்டது. மத்திய மந்திரிகளின் ஊழல்கள், தலித், பெண்கள், சிறுபான்மையினர் மீதான வன்முறை, மிகப்பெரிய வங்கி முறைகேடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.
நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் பலவீனப்படுத்தப்படுதல், லோயா வழக்கு போன்றவை குறித்து அவர் மவுனமாகவே இருந்து வருகிறார். விவசாயிகள் நெருக்கடியில் இருக்கின்றனர். ஆனால் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்யாமல், கார்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறார்.
வேலைவாய்ப்பின்மை, கப்பார் சிங் வரி (ஜி.எஸ்.டி.), பெண்கள் மீதான பா.ஜனதாவினரின் வன்முறைகளையே நாட்டுக்கு பிரதமர் மோடி தந்து இருக்கிறார். சீன பயணத்தின் போது டோக்லாம் விவகாரம் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசவில்லை. என்ன மாதிரியான பிரதமர் அவர்?
பா.ஜனதாவை போல இல்லாமல் காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒன்றிணைத்து, அன்பை பரப்பி வருகிறது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தவறான தகவல்களை பரப்பின.
ஆனால் உண்மை என்னவென்பது 4 ஆண்டுகளுக்குப்பிறகு வெளிவரத்தொடங்கி உள்ளது. உண்மையின் சக்தியை குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தொண்டர்கள் காட்டிக்கொடுத்தனர். அதைப்போல வர இருக்கிற கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் சட்டசபை தேர்தலிலும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கூறுகையில், ‘மோடியின் ஆட்சியில் ஊழலின் வேர்கள் வலுவாக ஊன்றியுள்ளன. நானும் ஊழலில் ஈடுபடமாட்டேன், மற்றவர்களையும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்ற பிரதமரின் கோஷம் என்னாச்சு?’ என்று வினவினார்.
மோடியின் ஆட்சியில் நாட்டின் நீதித்துறை வரலாறு காணாத வகையில் நெருக்கடியில் சிக்கியிருப்பதாகவும், ஊடகங்கள் தங்கள் பணியை செய்ய முடியவில்லை என்றும் குற்றம் சாட்டிய அவர், இந்த விவகாரங்களில் மக்களின் சார்பில் நாங்கள் போராடுவோம் என்றும் கூறினார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் பேசும்போது, மோடியின் ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினார். எனவே காங்கிரசுக்கும், ராகுல் காந்திக்கும் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஜன் ஆக்ரோஷ் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் திரு நாவுக்கரசர், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ், ராஜேஷ்குமார், கணேஷ் மற்றும் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #RahulGandhi #NarendraModi #Tamilnews