

பெங்களூரு:
பொது நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஒருவர், பெண் எம்.எல்.சி.யின் கையை பிடித்த வீடியோ வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.சி. வீணா அச்சையா. இதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.பி.ரமேஷ்.
இவர்கள் 2 பேரும் கடந்த 15-ந்தேதி சுதந்திரதினத்தையொட்டி மடிகேரி நகரில் நடந்த சுகாதார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது இருவரும் அருகருகே நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, வீணாவின் கையை ரமேஷ் பிடித்தார். தொடர்ந்து சிறிது நேரம் அவருடைய வலது கையை தனது கையால் பிடித்தவாறே இருந்தார். இதை சற்றும் எதிர்பாராத வீணா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ரமேஷின் கையை தட்டிவிட்டார். அதன்பிறகு இந்த சம்பவம் குறித்து இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
என்றபோதிலும் நேற்றும், நேற்று முன்தினமும், வீணாவின் கைகளை ரமேஷ் பிடிப்பதும், அதை வீணா தட்டிவிடுவதும் போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இது கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் எம்.எல்.சி.யிடம் தவறான முறையில் நடந்து கொள்வதா? என கண்டன கணைகளும் குவிந்தன.
இதையடுத்து நேற்று இருவரும் நடந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்தனர். எம்.எல்.சி. வீணா கூறியதாவது:-
நாங்கள் இருவரும் சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அப்போது எனது கையை பிடித்து என்னிடம் அவர்(ரமேஷ்), நான் உடல் இளைத்துவிட்டதாக கூறினார். அவர் எனது கையை பிடித்தது எனக்கு தர்மசங்கடமாக இருந்ததால் உடனே அவருடைய கையை தள்ளிவிட்டேன். அதன்பிறகு இதுபற்றி நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.வீட்டுக்கு சென்ற பிறகு அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. அப்போது, “என்னிடம் பொது இடத்தில் யாரும் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டது இல்லை” என்றேன். அதற்கு அவர், “நீங்கள் எனக்கு சகோதரி போன்றவர். உங்களை தர்மசங்கடப்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. இப்படி நடந்து கொண்டதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கேட்டு கொண்டார்.
எனினும் இந்த விவகாரத்தை இத்துடன் விடமாட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசித்து மேலிடத்துக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கோருவேன். அரசியலில் ஈடுபடும் பெண் என்பதால் எனக்கு எந்த சிரமமும் இருப்பதாக கருதவில்லை. காங்கிரஸ் என்னை நன்றாகவே நடத்துகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதுபோன்ற கசப்பான அனுபவத்தை நான் இதுவரை பெற்றதில்லை. இந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சி தருகிறது. இவ்வாறு வீணா தெரிவித்தார்.
டி.பி.ரமேஷ் கூறுகையில், “வீணாவை எனக்கு வெகு காலமாக தெரியும். அவர் எனது சகோதரி போன்றவர். அவருடைய கையை பிடித்ததில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அவர் விரும்பினால், இதற்காக பகிரங்கமாக அவரிடம் மன்னிப்பு கேட்க தயாராகவும் இருக்கிறேன்” என்றார்.