

நாகர்கோவில்:
குழித்துறை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின். இவரது மகள் அனிஷா (வயது 20). அனிஷா கடந்த 1-ந் தேதி குழித்துறையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். அங்கு பணியை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீடு திரும்பினார்.
குழித்துறை பழைய பாலம் அருகே வந்த போது அனிஷாவை மர்ம நபர் ஒருவர் வழிமறித்தார்.
அந்த நபர் அனிஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி தன்னுடன் வருமாறு கூறினார். பின்னர் அவரை மார்த்தாண்டம் அழைத்து சென்றார். அங்கு மறைவான இடத்தில் வைத்து அனிஷா அணிந்திருந்த பிரேஸ்லட், மோதிரம் ஆகியவற்றை பறித்து கொண்டார்.
மேலும் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனையும் எடுத்து கொண்டு, இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
நகையை பறிகொடுத்த அனிஷா, இது பற்றி பெற்றோரிடம் கூறினார். அவர்கள் சம்பவம் பற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்தனர்.
அதில் மர்ம நபர், அனிஷாவை மிரட்டி நகையை பறித்து சென்றதாகவும், அவரை கண்டுபிடித்து நகையை மீட்டு தர வேண்டும் எனவும் கூறியிருந்தனர்.
இது தொடர்பாக களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் மோகன அய்யர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து அனிஷாவிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர் யார்? என்று தேடி வருகிறார்கள்.