குஜராத் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி: 25-ந்தேதி பதவி ஏற்பு விழா

குஜராத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்-மந்திரி பதவியை பிடிக்க பாரதிய ஜனதா தலைவர்களிடம் கடும் போட்டி உருவாகி உள்ளது.
குஜராத் முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி: 25-ந்தேதி பதவி ஏற்பு விழா
Published on

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் 99 இடங்களில் வென்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ளது. குஜராத்தில் மீண்டும் விஜய் ரூபானி முதல்-மந்திரி ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த 22 ஆண்டுகளில் குஜராத்தில் பா.ஜ.க. இவ்வளவு குறைவான இடங்களுக்கு தள்ளப்பட்டது இல்லை என்பதால் விஜய்ரூபானி மீது பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதையடுத்து விஜய் ரூபானிக்கு பதில் வேறு ஒருவரை முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்யலாமா என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். குஜராத் புதிய முதல்வரை தேர்ந்து எடுக்க மத்திய மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் குஜராத் சென்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளனர். அதன் பிறகு புதிய முதல்- மந்திரி யார் என்பது தெரிய வரும். இந்த நிலையில் குஜராத் முதல்-மந்திரி பதவியை பிடிக்க பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் போட்டி உருவாகி உள்ளது.

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை குஜராத் முதல்வர் பதவியில் அமர்த்த பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது.

இவர் மோடியின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். குஜராத்தில் 7 தடவை எம்.எல்.ஏ. ஆக இருந்துள்ளார். 18 தடவை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு வஜுபாய் வாலா கர்நாடகா கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் மாநில அரசியலில் ஈடுபட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே அவர் குஜராத் முதல்வராக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவர் தவிர துணை முதல்வர் நிதீன்படேல் உள்பட வேறு சிலரது பெயர்களும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. புதிய முதல்-மந்திரி வரும் 25-ந்தேதி பதவி ஏற்பார்.

டிசம்பர் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினமாகும். அன்று பதவி ஏற்பதை மோடி வழக்கமாக வைத்திருந்தார். எனவே இந்த தடவையும் வரும் 25-ந்தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com