

புது டெல்லி:
ராஜதானி, துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வரிசையில் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லும் தேஜாஸ் ரெயிலை இந்திய ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக இந்த ரெயில் வரும் 4 தேதி டெல்லி -லக்னோ ரெயில்வே வழித்தடத்தில் செயல்பட உள்ளது.
டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் செவ்வாய் கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். இந்த ரயில் டெல்லியில் இருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு லக்னோவை அடையும். டெல்லியில் இருந்து லக்னோவிற்கு செல்வதற்கு ஏசி வகுப்பில் பயணம் செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.1125 ம் , எக்சிகியூடிவ் வகுப்பில் பயணம் செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ. 2310 ம் பயணக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
இம்மாதிரியான அதிவேக ரெயில்களில் மற்ற ரெயில்களை விட கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் வருகை மற்றும் புறப்பாடுகளில் கால தாமதம் இருப்பதாக பயணிகள் குறை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி-லக்னோ தேஜாஸ் ரயிலின் வருகை மற்றும் புறப்பாடில் ஏதேனும் கால தாமதம் ஏற்பட்டால் பயணிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு மணிநேரம் தாமதம் ஏற்பட்டால் ரூ.100 மற்றும் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டால் ரூ.250ம் வழங்க முடிவு செய்துள்ளது.
இந்த தேஜாஸ் ரெயிலில் பயணம் செய்பவர்களுக்கு பயணக்காப்பீட்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் ரூ.25 லட்சம் விபத்து காப்பீடு, மற்றும் பயணத்தின் போது, பயணிகளின் உடமைகள் ஏதெனும் திருட்டு போனால் ரூ. 1 லட்சம் காப்பீட்டு தொகை போன்ற அம்சங்கள் உள்ளன.