

திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் முன்னிலை வகித்தார். இதில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், மின்சார திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்பு சட்டம் சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீடு அறிக்கை ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, ராமலிங்கம், முருகேசன், கார்த்திக், செங்கோட்டையன், ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராசிபுரம் நகர, ஒன்றியக்குழு சார்பில் ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். வெண்ணந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செங்கோட்டுவேல், மாவட்ட குழு உறுப்பினர் மீனா, ராசிபுரம் நகர துணை செயலாளர் சரவணன், நகர பொருளாளர் சலீம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தலைவர் வேம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் குமாரபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். நகர துணைச்செயலாளர் மணி, வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, மனோகரன் மற்றும் இளைஞர் பெருமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.