குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் - டெல்லியில் கம்யூனிஸ்டு தலைவர்கள் கைது

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, நிலோத்பால் பாசு, பிருந்தா கரத் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, நிலோத்பால் பாசு, பிருந்தா கரத் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கிய போராட்டம் தலைநகர் டெல்லிக்கும் மற்ற மாநிலங்களுக்கும் பரவி உள்ளது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையும், அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை வீச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கோட்டை, மண்டி ஹவுஸ் பகுதிகளில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர். ஜந்தர் மந்தர் பகுதிகளிலும் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மண்டி ஹவுஸ் பகுதியில் நேற்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் கரத், நிலோத்பால் பாசு, பிருந்தா கரத், ஆனி ராஜா உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி வேறு இடங்களுக்கு கொண்டு சென்று இறக்கி விட்டனர்.

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், பஸ்சில் தன்னை ஏற்றிச் சென்ற போலீசார் கரோல் பகுதியில் இறக்கி விட்டதாகவும், மற்றவர்களை பாவனா பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தார்.

இதேபோல் ஜவகர்லால் நேரு மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பகவான் தாஸ் சாலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தடையை மீறி செங்கோட்டை பகுதியில் திரண்டு கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களை அந்தந்த இடங்களில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார் பின்னர் அவர்களை விடுவித்தனர்.

சாலையில் போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் அங்கேயே தொழுகை நடத்தினார்கள்.

மண்டி ஹவுஸ், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்துவதற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து திரண்டு வந்தவர்களை ஆங்காங்கே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

போராட்டம் நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போராட்டம் நடத்துமாறு அவர்களை போலீசார் கேட்டுக் கொண்டனர்.

போராட்டத்தின் காரணமாக பல்வேறு இடங்களில் பதற்றம் ஏற்பட்டதால் ராஜீவ் சவுக், பட்டேல் சவுக், லோக் கல்யாண் மார்க், பிரகதி மைதானம், கான் மார்க்கெட் உள்ளிட்ட 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.

இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. டெல்லி-குர்கான் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், போலீஸ் உத்தரவின்பேரில் டெல்லியின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் மண்டி ஹவுஸ், சீலாம்பூர், ஜாபர்பாத், முஸ்தாபாபாத், ஜாமியா நகர், ஷாகீன் பாக், பாவனா உள்ளிட்ட சில பகுதிகளில் செல்போன் மற்றும் இணையதள சேவைகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com