மோடிக்கு கடிதம் எழுதிய மணிரத்னம், ரேவதி மீது தேசத்துரோக வழக்கு

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது பீகார் போலீசார் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தனர்.
ரேவதி - மணிரத்னம்
ரேவதி - மணிரத்னம்
Published on

இந்தியாவில் நடக்கும் கும்பல் வன்முறையை கண்டித்தும், இதில் பிரதமர் தலையிடக் கோரியும், ஜூலை 23-ந் தேதி பிரபலமானவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினர்.

இயக்குனர் மணிரத்னம், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகரும், இயக்குனருமான அனுராக் காஷ்யாப் உள்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் அந்த கடிதத்தை மோடிக்கு எழுதினர்.

அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

எங்கள் அன்பான இந்திய நாட்டில் சமீபகாலமாக பல்வேறு சோக சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றை பார்க்கும்போது, அமைதியை விரும்பும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்ளும் எங்களுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், தலித்துகள், பிற சிறுபான்மை இனத்தவர்களை கும்பல் அடித்து கொல்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு தலித்துகளுக்கு எதிராக நாட்டில் 840-க்கும் மேற்பட்ட வன்முறைகள் நடத்தப்பட்டதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளிவிவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.

அதேபோல் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை ஆயுதமாக்கி சிறுபான்மையினருக்கு எதிராக பல வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவற்றை தடுக்க நீங்கள் (பிரதமர்) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கும்பலாக சேர்ந்து அடித்து கொல்லும் சம்பவங்களை நாடாளுமன்றத்தில் நீங்கள் கண்டித்தீர்கள். அது போதாது. அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், “49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவது போன்று இருக்கிறது. பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போல் இருக்கிறது. அதனால், அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இதையடுத்து, ஆகஸ்டு 20-ந் தேதி முசாபர்பூர் தலைமை நீதிபதி சூர்ய காந்த் திவாரி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

பீகார் போலீசாரின் இந்த நடவடிக்கை இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com