

கோல்டுகோஸ்ட்:
21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. 15-ந்தேதி வரை 12 நாட்கள் இந்த போட்டி நடக்கிறது. இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
இதற்கிடையே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் சிறுநீர் மாதிரி சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. போட்டி தொடங்குவதற்கு முன்பே விளையாட்டு கிராமத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்திய வீரர்கள் தங்கி இருந்த அறையில் ஏராளமான ஊசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் காரணமாகவே ஆஸ்திரேலிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு இந்த சோதனையை நடத்தியது.
இதற்கிடையே விளையாட்டு கிராமத்தில் சாய்னா நேவால் தந்தை ஹர்வர்சிங் நேவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருடன் அவரது தந்தையை தங்க போட்டி அமைப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.
காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டி 5-வது முறையாக நடக்கிறது. #GC2018 #GoldCoast