கல்லூரி மாணவி சாவில் மர்மம் நீடிப்பு- ஆர்டிஓ விசாரணை

தலைவாசல் அருகே கல்லூரி மாணவி மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவருக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
கார்த்திகா
கார்த்திகா
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். கூலித்தொழிலாளியான இவர் கேரளாவில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி தெய்வானை. இவர்களது மகள் கார்த்திகா (வயது 17). இவர் தலைவாசலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24)என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்திற்கு கார்த்திகாவின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. 18 வயது பூர்த்தி ஆகாமல் இருந்த தனது மகளை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் தெய்வானை புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் கார்த்திகாவை போலீசார் சதீசுடன் அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் மாலை கார்த்திகா வி‌ஷம் குடித்துவிட்டதாக கூறி அவரது கணவர் சதீஷ் தெய்வானையை போனில் தொடர்பு கொண்டு கூறினார். வி‌ஷம் குடித்ததும் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்ததாகவும் பின்னர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவள் இறந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தெய்வானை பதறி அடித்துக்கொண்டு சதீஷ் வீட்டிற்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

இந்த நிலையில் மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெய்வானை ஆத்தூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளார்கள். எனது பெரிய மகள் கார்த்திகாவை கடந்த 11-12-2019-ந் தேதி வேப்பநத்தத்தை சேர்ந்த சதீஷ், அவருடைய அப்பா அய்யாவு, சதீஷின் பெரியப்பா மகன் வெங்கடேசன். சதீஷின் மாமா மாணிக்கம், சதீஷின் அம்மா செல்வம், தனம் அனைவரும் எனது மகளை கடத்திச்சென்று கட்டாயப்படுத்தி சதீசுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

எனது மகள் கார்த்திகாவுக்கு தற்போது 17¾ வயது தான் ஆகிறது. நானும் எனது கணவர் ஆறுமுகமும் என் மைனர் மகளை மேற்படி நபர்கள் கடத்தி சென்றது சம்பந்தமாக தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தோம். அதற்கு தலைவாசல் போலீசார் மற்றும் சிலர் என்னையும், எனது கணவரையும் நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் ஊரில் குடியிருக்க முடியாது என்று போலீஸ் நிலையத்தில் வைத்து மிரட்டி எனது மகளை சதீசுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நாங்கள் அவர்களுக்கு பயந்து வந்து விட்டோம்.

இந்த நிலையில் எனது மகள் கார்த்திகா கடந்த 3-ந் தேதி எனக்கு போன் செய்து எனது கணவர் சதீசுக்கு பஞ்சாயத்து கிளார்க் வேலை வந்து உள்ளது. அதற்கு 1 லட்சம் ரூபாய் உடனே கட்ட வேண்டும். அதனால் 1 லட்சம் ரூபாய் கேட்டு எனது கணவர் மற்றும் மாமனார், மாமியார் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்கிறார்கள் என்று கூறினாள்.

அதற்கு நான் அப்பா கேரளாவில் இருந்து வரட்டும், வந்ததும் பணம் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினேன். மீண்டும் நேற்று முன்தினம் எனது கணவரின் தங்கை செல்விக்கு எனது மகள் கார்த்திகா போன் செய்து எனது கணவர் சதீசுக்கு பஞ்சாயத்து கிளார்க் வேலை வந்துள்ளது. அதற்கு 1 லட்சம் ரூபாய் உடனே கட்ட வேண்டும். எனவே அதற்கு என்னிடம் ஒரு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு எனது கணவர், மாமனார், மாமியார் என்னை கொடுமை செய்கிறார்கள். உடனே அப்பாவை அழைத்துக் கொண்டு வா என்று கூறி அழுதுள்ளாள். அதன் பிறகு சதீஷ், அய்யாவு, செல்வம், தனம் அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகள் கார்த்திகாவை வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் வாங்கி கொடுக்கவில்லை என்று கூறி எனது மகளை அடித்து வாயில் மருந்தை ஊற்றி கொலை செய்துவிட்டார்கள்.

எனது மகளை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி மிரட்டி சதீசுக்கு திருமணம் செய்தவர்கள் மீதும், எனது மகளிடம் ஒரு லட்சம் பணம் கேட்டு கொடுமைப்படுத்தியும், எனது மகளை அடித்து வாயில் மருந்து ஊற்றி கொலை செய்த எனது மகளின் கணவர் சதீஷ் மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறி உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கார்த்திகாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார். கார்த்திகா வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

கல்லூரி மாணவி மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com