கல்லூரி மாணவியை படுகொலை செய்த காதலன்

கோவையில் கல்லூரி மாணவியை கொலை செய்த காதலனை கைது செய்ய கோரி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலையுண்ட மாணவி நந்தினி - தற்கொலைக்கு முயன்ற தினேஷ்
கொலையுண்ட மாணவி நந்தினி - தற்கொலைக்கு முயன்ற தினேஷ்
Published on

கோவை கீரணத்தம் அருகே உள்ள கல்லுக்குழியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராமாத்தாள். இவர்களது மகள் நந்தினி(வயது 21). இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இறுதியாண்டு படித்து வந்தார்.

கணபதி அடுத்துள்ள சங்கனூரை சேர்ந்தவர் தினேஷ்(21). இவர் அலங்கார பொருட்கள் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

நந்தினியும், தினேசும் சிறுவயது முதல் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தினேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நந்தினியிடம் வற்புறுத்தி வந்தார்.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் இருவீட்டாரும் சந்தித்து பேசி நந்தினியின் படிப்பு முடிந்தவுடன் திருமணத்தை வைத்து கொள்ளலாம் என்றனர். இதையடுத்து வழக்கம்போல் நந்தினி கல்லூரிக்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் நந்தினியை சந்தித்த தினேஷ் இப்போதே என்னை திருமணம் செய்து கொள் என்றார். அதற்கு நந்தினி எதுவும் சொல்லவில்லை.

தொடர்ந்து தினேஷ், நந்தினியை பார்க்கும் இடங்களில் எல்லாம் இதுகுறித்து கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதையடுத்து நந்தினி சில நாட்களாக அவரிடம் சரியாக பேசவில்லை.

இதனால் தினேஷ் அவர் மீது கோபத்தில் இருந்து வந்தார். நேற்று மதியம் நந்தினியை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். நந்தினி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த தினேஷ் என்னை இப்போதே திருமணம் செய்து கொள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு நந்தினி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார்.

ஆனால் அதை கேட்க மறுத்த அவர் வீட்டில் இருந்த சேர்களை எடுத்து நந்தினியை தாக்கினார். இதில் அவர் தலை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்தார்.

இருப்பினும் ஆத்திரம் தீராத தினேஷ் நந்தினியை வீட்டில் இருந்த கயிறை எடுத்து கழுத்தை இறுக்கினார். மேலும் தான் கொண்டு வந்திருந்த சாணி பவுடரை நந்தினியின் வாயில் ஊற்றினார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கோவில் பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் காதலியை கொன்ற தினேஷ் தானும் சாணிபவுடரை குடித்து விட்டதாக கூறி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com