மோட்டார்சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர், பெண் பலி

மின்சார டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் லிப்ட் கேட்ட பெண் மற்றும் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவை வேல்ராம்பட்டு திருமலை நகரை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகன் சுரேந்தர் (வயது 20).

இவர் சென்னையில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். விடுமுறை தினத்தில் வீட்டுக்கு வந்த சுரேந்தர் இன்று காலை கல்லூரிக்கு செல்ல ஏதுவாக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்.

இரவு 10.30 மணியளவில் சுரேந்தர் கொக்குபார்க் அருகே சென்றபோது திலாஸ்பேட்டையை சேர்ந்த கிஷோர் என்பவரின் மனைவி விண்ணரசி (30) என்பவர் சுரேந்தரிடம் லிப்ட் கேட்டார்.

இதனை ஏற்று விண்ணரசியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு சுரேந்தர் புறப்பட்டார். சிவாஜி சிலை அருகே வந்தபோது அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த மின்சார டிரான்பார்மர் மீது மோட்டார் சைக்கிள் அதிவேகமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் உடைந்து போனது.

மேலும் தூக்கி வீசப்பட்ட சுரேந்தரும், விண்ணரசியும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்து போனார்கள்.

இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் இறந்த விண்ணரசிக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com