

சென்னை:
கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு விசாரணை அதிகாரியாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் நியமிக்கப்படுவதாக கவர்னர் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து விசாரணை அதிகாரி ஆர்.சந்தானம், நாளை (வியாழக்கிழமை) மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். அன்று மாலை மதுரையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு செல்லும் அவர், கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பணிபுரிந்த தேவாங்கர் கல்லூரிக்கு செல்கிறார்.
கல்லூரியில் இருந்து விசாரணை அதிகாரி ஆர்.சந்தானம் தன்னுடைய விசாரணையை தொடங்குகிறார். அப்போது சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அவரை அணுகி தகவல் தெரிவிக்கலாம். கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியால் வேறு யாராவது பாதிக்கப்பட்டு இருந்தாலும், அவர்களும் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும். நாளை மாலை கல்லூரியில் விசாரணையை முடித்து, மறுநாள் (வெள்ளிக்கிழமை) அருப்புக்கோட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் விசாரணை அதிகாரி ஆர்.சந்தானம் தங்குகிறார். அன்றைய தினமும் தகவல் தெரிவிப்பவர்கள் அங்கு வந்து தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.