திருக்கோவிலூர் அருகே கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை

கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருக்கோவிலூர் அருகே கல்லூரி ஊழியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை-பணம் கொள்ளை
Published on

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சடக்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ரெஜினா (வயது 48). இவர்களுக்கு எட்வின்ராஜ் (26) என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.

எட்வின்ராஜ் சென்னையில் தங்கிருந்து அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். திவ்யா சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

செல்வம் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே ரெஜினா தனது வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவில் ரெஜினாவின் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த பீரோவை திறந்தனர். அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

மேலும் பீரோவில் இருந்த வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களையும் எடுத்தனர். பின்னர் கொள்ளையடித்த பணம், நகைகளோடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

காலையில் கண் விழித்து பார்த்த ரெஜினா வீட்டில் இருந்த பீரோ திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம மனிதர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து மணலூர் பேட்டை போலீசுக்கு ரெஜினா தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com