ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

நாகை மாவட்டத்தில் நீர் நிலைகளில் ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை கரைத்தால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைக்க ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் எவ்வித ரசாயன கலவையற்றதுமான கிழங்குமாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்குவிளைவிக்காத இயற்கை வர்ணங்களுடன் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க கூடாது. மீறி கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகை மாவட்டத்தில் நாகை வெட்டாறு (நாகூர் பாலம் அருகில்) மற்றும் புதியகடற்கரை, மயிலாடுதுறையில் காவிரி ஆறு, தரங்கம்பாடி கடற்கரை, பூம்புகார் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com