

ராமநாதபுரம்:
கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2 கால்களும், 2 கைகளும் செயலிழந்து தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட உள்ளன.
சிறப்பு சக்கர நாற்காலிகளை தேவையின் அடிப்படையில் 60 வயதிற்குட்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 55 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்த சிறப்பு சக்கர நாற்காலிகள் பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 கால்களும் செயலிழந்து இரண்டு கைகளும் நல்ல நிலையில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். கல்வி பயிலும் நபர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் மற்றும் ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெறாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எனவே இந்த இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் வாகனம் பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் வருமானம் ஈட்டும் வகையில் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கும் மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கப்பட உள்ளன. எனவே, 18 வயது முதல் 45 வயது வரை உள்ள கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத, மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட தாய்மார்களும் இந்த திட்டத்தில் பயனடைய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.