மனுகொடுக்க வந்த மூதாட்டியை தனது காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்ட கலெக்டர்

மனு கொடுக்க வந்த மூதாட்டியை அவரது வீட்டுக்கு தனது காரில் அழைத்து சென்றுவிட்டதுடன், குறையை தீர்க்க மதுரை கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டார்.
கலெக்டர் அன்பழகனிடம் மூதாட்டி மனு கொடுத்ததையும், அவரை அவரது வீட்டுக்கு கலெக்டர் அழைத்துச் சென்ற காட்சி
கலெக்டர் அன்பழகனிடம் மூதாட்டி மனு கொடுத்ததையும், அவரை அவரது வீட்டுக்கு கலெக்டர் அழைத்துச் சென்ற காட்சி
Published on

மதுரை:

மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மூதாட்டி ஒருவர் மனு கொடுக்க வந்திருந்தார். அவர் மனுவை பெட்டியில் போடாமல் கலெக்டரை எதிர்பார்த்து காத்திருந்தார். கலெக்டர் அன்பழகன், அங்கு வந்தவுடன் அவரை நோக்கி கையெடுத்து கும்பிட்டு என்னை காப்பாற்றுங்கள் என்றார். உடனே கலெக்டர் மூதாட்டியை ஆசுவாசப்படுத்தி இருக்கையில் அமரவைத்து உங்களுக்கு “என்ன குறை சொல்லுங்கள்” என்று கனிவுடன் கேட்டார்.

உடனே மூதாட்டி தனது பெயர் பாத்திமா சுல்தான் (வயது77) என்றும், கோரிப்பாளையம் வயக்காட்டு தெருவில் வசித்து வருவதாக கூறி கலெக்டரிடம் ஒரு மனுவை கொடுத்தார். அதில் பெண் ஒருவர் தனக்கு தர வேண்டிய ரூ.40 ஆயிரம் பணத்தை தராமல் இழுத்தடிப்பதால், பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.

இந்த மனுவை படித்த பின்பு “கலெக்டர், மூதாட்டியிடம் உங்களது குறை தீர்த்து வைக்கப்படும், கவலைப்படாதீர்கள்” என்றார்.

மேலும் “வீட்டிற்கு எப்படி செல்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மூதாட்டி, “நான் நடந்து தான் செல்ல வேண்டும்” என்றார். இதனை கேட்ட கலெக்டர் “வாருங்கள் காரில் உங்களை அழைத்து சென்று வீட்டில் விடுகிறேன்” என்றார்.

இதைகேட்டு மூதாட்டி திகைத்து நின்றார். பின்னர் கலெக்டர், மூதாட்டியை தனது காரில் அழைத்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்றார். வீட்டிற்குள் சென்ற கலெக்டர், சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்து மூதாட்டியிடம் ஆறுதலாக பேசினார். மேலும் அந்த மூதாட்டிக்கு பெண்ணிடம் இருந்து கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கவும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் மூதாட்டிக்கு பழங்கள் வாங்கி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com