ராணிப்பேட்டை சிப்காட்டில் தனியார் ஷூ கம்பெனிக்கு சீல்- கலெக்டர் அதிரடி
ராணிப்பேட்டை:
கொரோனா வைரஸ் தொற்று நோயினால் தமிழகமெங்கும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டையில் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் சில கம்பெனிக்கு மட்டும் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார்.
இதில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்ற அத்யாவசிய தொழிற்சாலைகள் மட்டும் குறைந்தபட்ச தொழிலாளர்களை கொண்டு பணி செய்து வருகின்றன.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஒரு தொழிற்சாலையில் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் முக கவசம் செய்து தருவதாக அனுமதி பெற்றனர்.
அந்த தொழிற்சாலை முககவசம் தயாரிக்க 10 பெண் தொழிலாளர்களை கொண்டு மட்டும் முக கவசம் தயாரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு 40 பெண்கள் தொழிலாளர்களை காலணி தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி அந்த தொழிற்சாலையை மூடி சீல் வைக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து வாலாஜா வட்டாட்சியர் பாலாஜி மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று அந்த தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

