

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
வீர, தீர செயல்கள் புரிந்த பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தை தினமான ஜனவரி மாதம் 24-ந் தேதி அரசு மாநில விருதாக காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான விருதுக்கு சாதனை படைத்த 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணம் தடுத்தல், சமூக அவலங்கள் மற்றும் அதனை தீர்வு காண்பதற்கான புத்தகங்கள் மற்றும் கையேடு எழுதி வெளியிட்டவர்கள், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்ற வீர தீர செயல் புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் இருந்து பெற்று அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.