வருகிற 30-ந்தேதி வரை நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில், விவசாயிகள் வருகிற 30-ந் தேதி வரை நெற்பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
கலெக்டர் சந்தீப் நந்தூரி
கலெக்டர் சந்தீப் நந்தூரி
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், உடன்குடி, கருங்குளம், தூத்துக்குடி, கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் வட்டாரங்களில் உள்ள 34 குறுவட்டங்களில் நெற்பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் இந்த திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நெல் பயிரிடும் விவசாயிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொதுசேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். எனவே நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வருகிற 30-ந் தேதிக்குள் காப்பீடு செய்யலாம்.

பயிர் காப்பீடு செய்ய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.424 காப்பீடு கட்டணமாக அரசால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், ஆகியவற்றை இணைத்து, கட்டண தொகையை செலுத்திய பிறகு, அதற்கான ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

காப்பீடு பதிவு செய்யப்படும் அடங்கலில் உள்ள வருவாய் கிராமம், சர்வே எண், சாகுபடி செய்யப்படும் பயிர் மற்றும் பரப்பு, வங்கி கணக்கு ஆகிய விவரங்களை ஒப்புகை சீட்டில் சரிபார்த்து பெற வேண்டும். காப்பீடு பதிவின் ஆவணங்கள் மற்றும் ரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதி நேர நெரிசலை தவிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளும் முன்கூட்டியே பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com