

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக அரசு ஆர்வமுள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க ஆவன செய்யும் வகையில் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய திட்டத்தினை மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் இதுநாள் வரை உற்பத்தி தொழிலுக்கு ரூ.10 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சமும், வியாபாரத்திற்கு ரூ.5 லட்சமும் என திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்சவரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uye-gp என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தாசில்தாரால் வழங்கப்பட்ட இருப்பிடச்சான்று, விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், 5-ரோடு, சேலம்-636 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மேற்கண்ட திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற்று சுயதொழில் தொடங்கி பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் 5 ரோட்டில் உள்ள மாவட்ட தொழில் மையத்தினை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.