

சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், வருகிற 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்குள்ளான அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க தடை தொடரும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 9 மணி வரை இயங்கலாம். மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வருகிற 21-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது.
ஏற்காட்டுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்லுவதை கட்டுப்படுத்த கலெக்டரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும். பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.