ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும் - கலெக்டர் வீரராகவராவ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 30-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் வீரராகவராவ்
கலெக்டர் வீரராகவராவ்
Published on

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும், குண்டாறு வடிநில கோட்டம், மதுரையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதாரர்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாகக் குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்புத் தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற் கொள்ளப்படுகின்றன.

குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மேற்குறிப்பிட்ட 69 கண்மாய்களில் 211.47 கி.மீ நீள அளவிற்கு கரைகள் பலப்படுத்துதல், 127.90 கி.மீ நீள அளவிற்கு வரத்துக்கால்வாய் புனரமைத்தல், 6.3 கி.மீ நீள அளவிற்கு உபரி நீர் வடிகால் புனரமைத்தல், 112 மடைகள் மராமத்து செய்தல் , 133 மடைகள் மீளக்கட்டுதல் , 41 கலுங்குகள் மராமத்து செய்தல், 10 கலுங்குகள் மீளக்கட்டுதல், சீமக்கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாயினை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜுலை மாதம் தொடங்கப்பட்ட இந்த பணிகள் அனைத்தும் வருகிற 30-ந் தேதிக்குள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மேலும், குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும், வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும், ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும், சீமைக் கருவேல மரங்களை அகற்றிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இக்குடிமராமத்து பணியினை சிறப்பாக செயல் படுத்தி ஆயக்கட்டுதாரர் நலச்சங்கத்தினை ஊக்குவித்திடும் வகையில் முதல் மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2-வது மற்றும் 3-வது பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் பிரபு, ஆனந்த்பாபுஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராம மூர்த்தி, வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com