

நெல்லை:
நெல்லை மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தினமும் காலையில் ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணி எவ்வாறு நடைபெறுகிறது என்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பாளை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள குடியிருப்புகள், செயிண்ட் பால்ஸ் நகர் ஆகிய இடங்களில் கலெக்டர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஆயுதப் படை மைதானம், காவலர் குடியிருப்புகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் முன்பு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி கிடப்பதை பார்த்த கலெக்டர் அந்த வீடுகளை கட்டி வரும் காண்டிராக்டருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இதே போல் செயிண்ட் பால்ஸ் நகரில் புதிதாக ஒரு வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அந்த வீட்டின் முன்பும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வண்ணம் தண்ணீர் தேங்கி கிடந்ததால் அந்த வீட்டின் கட்டுமான உரிமையை ரத்து செய்து சீல் வைத்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாராயணன் நாயர், சுகாதார அதிகாரி பொற்செல்வன் மற்றும் பலர் உடன் சென்றனர்.
டெங்கு கொசு ஒழிப்பு பணி ஆய்வில் கலெக்டர் ஈடுபட்டதையும், சீல் வைக்கப்பட்ட வீட்டையும் படத்தில் காணலாம்.