கோவை சிங்காநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை- ரூ.10 லட்சம் கொள்ளை

கோவை சிங்காநல்லூரில் தொழில் அதிபர் வீட்டில் 100 பவுன் நகை- ரூ.10 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை கொள்ளை
நகை கொள்ளை
Published on

கோவை:

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆதம்ஷா (வயது 63).

இவர் சூலூர் பட்டணத்தில் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துக்கு தேவையான உதிரி பாகம் மற்றும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் எந்திரங்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இவரது மருமகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை பார்க்க ஆதம்ஷா கடந்த 24-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து விட்டு நேற்று இரவு கோவை திரும்பினார்.

அப்போது அவரது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தது. துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன.

பீரோக்களை ஆதம்ஷா சோதனை செய்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆதம்ஷா இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைளை பதிவு செய்தனர். மோப்ப நாய் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா இல்லாததால் கொள்ளையர்கள் குறித்து துப்புதுலக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com