

கோவை:
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சி வரும்போது தூத்துக்குடியில் இருந்து கொண்டு வரப்படும் பெட்டிகள் இணைக்கப்படும். 2 ஏ.சி. பெட்டி, 5 முன் பதிவு செய்யப்பட்ட பெட்டி, 2 முன் பதிவு செய்யப்படாத பெட்டி, பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பெட்டி உள்பட 10 பெட்டிகள் இதில் இணைக்கப்படும்.
நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ரெயில் வாஞ்சி மணியாச்சி வந்ததும் தூத்துக்குடியில் இருந்து வந்த பெட்டிகள் இணைக்கப்பட்டது.
அதன் பின்னர் ரெயில் புறப்பட்டு வந்தது. நேற்று காலை 7.20 மணிக்கு கோவை வந்தது. கோவை ரெயில் நிலையம் வந்ததும் அதில் இருந்த பயணிகள் இறங்கினார்கள்.
பின்னர் ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிக்காக ரெயில் நிலையம் அருகே உள்ள யார்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து வந்த ஏ.சி. பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென்று பரவ தொடங்கியது.
இதனை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரெயில்வே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ரெயில் ஏ.சி. பெட்டியில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பின்னர் தான் தீயை அணைக்க முடிந்தது. இந்த தீ விபத்தில் ஏ.சி. பெட்டியின் இருக்கைகள் எரிந்து சேதம் அடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.